districts

img

இட நெருக்கடியில் ஆதி திராவிடர் நலப்பள்ளி மாற்று இடம் கோரும் மார்க்சிஸ்ட் கட்சி

தாம்பரம்,மே 14 தாம்பரம் மாநகராட்சி, 32வது வட்டம், கடப்பேரி திருவள்ளுவர் புரத்தில் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வரு கிறது. ஒரே தெருவில் எதிரெதிரே உள்ள இரண்டு கட்டிடங்களில் பள்ளி இயங்குகிறது. 4 சென்ட் நிலத்தில் 3 வகுப்பறைகளுடன் ஒரு கட்டிடமும், 10 சென்ட் நிலத்தில் 3 வகுப்பறைகளுடன் மற்றொரு கட்டிடமும் உள்ளது. கடப்பேரி, வெட்டியான்குன்று, பெரியார் நகர், புலிகொரடு கன்னடபாளையம், திருநீர்மலைச் சாலை, திருவள்ளுவர் நகர், அற்புதம் நகர், கே.கே.பாளையம், கஸ்தூரிபாய் நகர் பகுதிகளை சேர்ந்த 140 மாணவர்கள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளியில் நிலவும் இட நெருக்கடி, விளையாட்டு மைதானம் போதாமை போன்றவற்றால் இந்தப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. பள்ளியை சுற்றியுள்ள பகுதி களில் அண்மையில் நடைபெற்ற கணக்கெடுப்பின்படி 1088 மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இருப்பினும் சொற்ப அளவிலேயே இந்தப் பள்ளியில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அனைத்து வசதிகளுடன் கூடியதாக, இந்தப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு வட்டாட்சியர், தாம்பரம் மாநகராட்சி மேயர் உள்ளிட்டோரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு அளித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா குறிப்பிடுகையில், “சமூகம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய விளிம்புநிலை மக்கள் கடப்பேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். இந்த பகுதியில் ஆதி திராவிடர் நல நடுநிலைப் பள்ளி மட்டுமே உள்ளது. இந்த பகுதியை சுற்றி சுமார் 3 கி.மீ. சுற்றளவில் எந்த ஒரு அரசு பள்ளியும் இல்லை. அண்மைக் காலமாக ஏற்பட்டு வரும் விழிப்புணர்ச்சியால், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடந்தாண்டு ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளியை நிலை உயர்த்தி, விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்தப் பள்ளிக்கு அருகே ராஜ கோபால் நகரில், ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தி வந்த களம் புறம்போக்கு நிலம் (சர்வே எண் 110) 98 சென்ட் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. அண்மையில் வருவாய்த்துறை இந்த இடத்தை மீட்டுள்ளது. மேலும் அந்த இடத்திற்கு அருகில் அரசு காலிமனை உள்ளது. குடியிருப்புகளை ஒட்டியும், விரிந்த பரப்புடனும் உள்ள அந்த இடத்திற்கு பள்ளியை மாற்ற வேண்டும்” என்றார். தாம்பரம் மாநகராட்சியும்,  ஆதி திராவிடர் நலத்துறையும் நடவடிக்கை எடுக்குமா?

;