districts

முருகனுக்கு சிகிச்சை அளிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சென்னை,அக்.11- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன்,உடல் நலம் மோசமாக இருப்பதாகவும், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மாமியாரும், நளினியின் தாயாரு மான பத்மா மனு தாக்கல் செய்துள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது:- எனது மகள் நளினியும், அவரது கணவர் முரு கனும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றனர். தற்போது என் மகள் நளினி பரோலில் வெளியில் வந்து வேலூரில் என்னுடன் தங்கி உள்ளார்.  வேலூர் சிறையில் உள்ள என் மரு மகன் முருகனை கடந்த 8 ஆம் தேதி எனது வழக்கறிஞர்கள் புகழேந்தி, எழிலரசு ஆகியோர் சந்திக்கச் சென்றனர். அப்போது முருகன் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.  கடந்த 32 நாட்களாக அவர் உண்ணா நிலை கடைபிடித்து வருகிறார். அதனால், அவரது உடல் எடை 63 கிலோவிலிருந்து 43 கிலோவாக குறைந்துள்ளது. அவரது உயிருக்கு சிறை அதிகாரிகளால் ஆபத்து இருப்பதாக கருதுகிறேன். எனவே, அவருக்கு தகுந்த சிகிச்சை வழங்க வேண்டும் என்று உள்துறை கூடுதல் தலைமை செயலாளர், சிறைத் துறை.டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு கடந்த 9 ஆம் தேதி கோரிக்கை மனு அனுப்பினேன். என் மனுவை பரிசீலித்து சிகிச்சையை முருகனுக்கு வழங்க அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.