districts

img

லஞ்சம்: ஆர்டிஓ உள்ளிட்ட 2 பேர் கைது

கடலூர், மே 31- கடலூர் அருகே கேப்பர் மலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு இருசக்கரம், நான்கு சக்கரம் வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம், புதிய பதிவு எண்கள் வழங்குவது, பழைய வண்டிகளுக்கு தகுதி சான்று வழங்குவது, பெயர் மாற்றம் செய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டம், பத்திரக் கோட்டையை சேர்ந்த வெங்கடாஜலபதியின் நண்பர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த செல்வராஜ் (37) என்பவர் சென்னையில் இருந்து கழிவு நீர் வாகனத்தை வாங்கி யுள்ளார். அதற்கு பெயர் மாற்றம் செய்து தர ஏற்பாடு செய்யுமாறு வெங்கடாஜலபதியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வெங்கடாஜலபதி கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகரை அணுகி கழிவு நீர் வாகனத்திற்கு பெயர் மாற்றம் செய்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு சுதாகர் (52) ரூ. 5,500 செலவாகும் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து  இதுகுறித்து வெங்கடாஜலபதி கடலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரி வித்தார். காவல் துறையினரின் அறி வுரைப்படி ரசாயன தடவிய ரூபாய் நோட்டுகளை சுதாகரிடம் கொடுக்க முயன்றார். அப்போது அவர் அவரது தனிப்பட்ட உதவியாளரான கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த சிவசங்கர் (எ) குள்ள சிவா என்பவரிடம் கொடுக்குமாறு கூறி யுள்ளார். வெங்கடாஜலபதி சிவசங்கரிடம் பணத்தை கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட சிவா வட்டார போக்கு வரத்து அலுவலரிடம் சென்று பணத்தை கொடுக்க முயன்ற போது, காவல் துறையினர் சுதாகரை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து சுதாகர் மற்றும் அவருக்கு லஞ்சம் பெற உதவிய சிவசங்கர் இருவரையும் கைது செய்தனர். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட போது, அங்கு 2 லட்சத்திற்கு மேல் பணம் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

;