districts

img

கொருக்குப்பேட்டையில் தடை செய்யப்பட்ட 2,200 கிலோ பாக்குகள், ரூ.23 லட்சம் பறிமுதல்

சென்னை, அக். 13- குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ய தமிழ்நாடு  அரசு தடை செய்துள்ளது. ஆனால் அண்டை  மாநிலங்களில் போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதால், அதை கடத்தி வந்து தமிழ்நாட்டில் நல்ல விலைக்கு சிலர் கள்ளத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறை, உணவு வழங்கல் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலை யில் ஆர்.கே. நகர் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் காவல்துறையினர் கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனை செய்த போது, அதில் தடை செய்யப்பட்ட பாக்கு. பான் மசாலா. ஹன்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவில் இருந்த இரண்டு பேரை கைது செய்து காவல் நிலை யம் அழைத்து வந்து நடத்திய விசாரணை யில், அவர்கள் கொளத்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அருணாச்சலம் (30), கொடுங்கையூரை சேர்ந்த ஜோசப் (42)  என்பது தெரிய வந்தது. மேலும் அம்பத்தூரை  சேர்ந்த மொத்த விற்பனை ஏஜென்ட் குலாம் மொய்தீன் (35) குடோன் வைத்து மொத்தமாக அந்த பகுதியில் சிறு சிறு  கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும்  தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் வேலை செய்த பரமக்குடியை சேர்ந்த ராஜா  (27) உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறை யினர் கைது செய்து, குடோனில் இருந்து 2,200 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 23 லட்சமாகும்.