கிருஷ்ணகிரி,ஜூலை.12- கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் ஓசூர் 13 வது புத்தகத் திருவிழா ஜூலை 12 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு திறந்து வைத்தார். தலைவர் பாலசுந்தரம் வர வேற்றார். ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆணையர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா, புத்தகத் திருவிழா செயலாளர் அரிச்சந்திரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயலாளர் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், துணைத் தலைவர்கள், சிவக்குமார்,மணிமேகலை, நீல கண்டன், காவேரி மருத்துவமனை இயக்குநர் விஜயபாஸ்கர் மாவட்ட கல்வி அலுவலர்கள் முனிராஜ், சிவ ராமன் ஆகியோர் உடனிருந்தனர். மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீர பாண்டியன் நன்றி கூறினார். மாவட்டத்திலேயே முதல் முறையாக 2008 இல் ஓசூர் அரசு விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதல் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது.
10 லட்சம் புத்தகங்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டு தொடர்ந்து 13 வது ஆண்டாக இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இதில் 105 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் தலைப்புகளில் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. விற்பனையில் 10 விழுக்காடு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகள் தினமும் மாலையில் சிறந்த எழுத்தாளர்கள், அறிஞர்கள், பேச்சாளர்கள், கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் ,மாணவர்கள் குடியிருப்போர் நலச் சங்க மக்களின் பங்கேற்போடு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. மாணவர்கள் பங்கேற்பதற்காக பிஎம்சி டெக் கல்வி நிறுவனம், டாடா நிறுவனம் இலவச பேருந்து வசதிகள் செய்துள்ளது.