நாமக்கல், பிப்.21- பள்ளிபாளையத்திலுள்ள தனியார் பள்ளியில், நடைபெற்ற வணிகர் தினம் கண்காட்சியில் சிற்றுண்டி கடைகளை அமைத்திருந்த மாணவ, மாணவிகள் கவனம் ஈர்த்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ப்ரிகேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், குறித்து மாணவர்களுக்கு விளக்கும் வகையில் சிறப்பு கண்காட்சி வெள்ளியன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் தங்கள் படைப்புகளை பார்வைக்காக வைத்திருந்தனர். மேலும், இந்நிகழ்வில் வணிக வியாபாரம் சார்ந்த புரிதலை ஏற்படுத்தும் வகையில், மாணவ, மாணவிகள் சார்பில் 20க்கும் மேற்பட்ட சிற்றுண்டிக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இனிப்பு விற்பனை செய்யும் கடைகள், காய்கறி வியாபாரம், தர்பூசணி பழம், மோர் விற்பனை, சுண்டல் விற்பனை, நொறுக்குத் தீனி கடை, பேன்சி ஸ்டோர், ஸ்டேஷனரி பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சிறிய அளவிலான கடைகளை பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகள் அமைத்திருந்தனர். கண்காட்சியை பார்க்க வருகை தந்த குழந்தைகளின் பெற்றோர் சிற்றுண்டிக் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு வழங்கி மகிழ்ந்தனர். காலை துவங்கி மதியம் வரை நடைபெற்ற இக்கண்காட்சியில் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டு, தங்கள் குழந்தைகளின் படைப்பாற்றலை கண்டு மகிழ்ந்தனர்.