districts

பாக்கி ரூ.1650 கோடியை பெற்றுத் தரவேண்டும்

கடலூர், ஏப். 29-தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் விருதாசலத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் என். பழனிசாமி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் அறிக்கை சமர்ப்பித்தார். மாநில பொருளாளர் எம். சின்னப்பா, துணைத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், ஜி.மாதவன் உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கடலூர் மாவட்டம் பெண்ணாடம் சிறீ அம்பிகா, ஏ. சித்தூர் திருஆரூரான், தஞ்சை ஆரோன் ஆகிய ஆலைகள் ரூ.200 கோடி எப்ஆர்பி கரும்பு பண பாக்கி வைத்திருக்கிறது. 14 நாட்களுக்குள் சட்டப்படி கொடுத்திருக்க வேண்டிய பணத்தை இரண் டாண்டு காலமாக அலைக்கழித்து வருகின்றனர். மாநில அரசும், சர்க் கரை துறை ஆணையரும் உரிய நடவடிக்கை எடுத்து வட்டியுடன் விவசாயிகளுக்கு பெற்றுத்தர வலியுறுத்தி விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை மே 25 அன்று முற்றுகையிடுவது என்று இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.தமிழகத்தில் உள்ள 24 தனியார் சர்க்கரை ஆலைகள் 2013-14 முதல் 2016-17 வரையிலான நான்கு ஆண்டு காலத்திற்கு மாநில அரசு அறிவித்த கரும்புக் கான பரிந்துரை விலையை கொடுக்கவில்லை. ரூ.1, 217 கோடி பாக்கி வைத்துள்ளன. விலையை அறிவித்த மாநில அரசு பாக்கித் தொகை பெற்றுத் தர தவறிவிட்டது. தனியார் சர்க்கரை ஆலைகளும் அந்த தொகையை தரமாட்டோம் என்று கூறுகின்றன. அரசின் விலை அறிவிப்பை நம்பி விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து ஆலைக்கு அனுப்பி வைத்தனர். எனவே, கரும்பு பண பாக்கிக்கு மாநில அரசே பொறுப்பேற்று பெற்றுத்தர வேண்டும் என்று இந்த மாநிலக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசின் நிர்ப்பந்தத்தை ஏற்று கரும்புக்கான விலையை நிர்ணயம் செய்ய வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை 8.1.2019-ல் தமிழக சட்டமன்றத்தில் மாநில அரசு நிறைவேற்றிவிட்டு 1980 முதல் தமிழகத்தில் அமலில் இருந்த மாநில அரசின் பரிந்துரை விலையை (எஸ்ஏபி) நிறுத்தி கரும்பு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் கொடுக்க மறுத்த பணத்தை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 13.2.19 அன்று சென்னை உயர்நீதிமன்றம், லாப பங்குத் தொகையை தனியார் சர்க்கரை ஆலைகள் தரவேண்டும் என்றும் சிஸ்மா போட்ட மனுவை தள்ளுபடிசெய்தும் உத்தரவு பிறப்பித்தது.இதன் மூலம் ஏழு லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.240 கோடி வரை தனியார் ஆலைகள் தரவேண்டியுள்ளது. மாநில அரசுஉரிய நடவடிக்கை எடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவேண்டும் என்றும் இந்த மாநிலக்குழு கூட்டத்தில் கேட்டுக்க்கொள்ளப்பட்டுள்ளது.

;