districts

img

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு கோடை கால சிறப்பு பேருந்துகள் இயக்க கோரிக்கை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி செல்ல கோடை கால சிறப்பு பேருந்துகள் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போது கோடை விடுமுறை காலத்தை முன்னிட்டு தகிக்கும் வெயிலை சமாளிக்க குளிர்சியான நீலகிரிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதனால் நீலகிரி மலையின் அடிவார பகுதியான மேட்டுப்பாளையத்தில் தினசரி கூடும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஆனால்  மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற சுற்றுலா தலங்களுக்கு நேரடியாக செல்ல போதிய அளவில் பேருந்துகள் இல்லை மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்படுகின்றன.

கோவை, திருப்பூர் ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் தொலைதூரப் பேருந்துகள் தான் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வந்தடைந்து பின்னர்  மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு செல்கின்றன.இப்பேருந்துகளில் ஏற்கனவே பயணிகள்  இருப்பதால்  மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை, குன்னூர் செல்லும் பயணிகளுக்கு அமர  இடமே கிடைப்பதில்லை. மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு  நின்று கொண்டு தான் செல்ல வேண்டும்.சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரம் கால் வலிக்க நின்று செல்வதால் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனை சமாளிக்க  மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின்  கோரிக்கையாக உள்ளது.கோடை விடுமுறையான ஒரு மாத காலத்திற்கு மட்டுமாவது ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து என்ற வீதம் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்பட்டால் சுற்றுலா பயணிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின்  வசதிக்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து கோடை கால சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

;