districts

img

பஞ்சாலைகளில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்ட பெண்களை மீட்டிடுக- சிஐடியு - மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பஞ்சாலைகளில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்க கோரி சிஐடியு மற்றும் மாதர் சங்கத்தினர்  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை உடையாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கற்பகம் ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றி வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் (சோம்பரிமை) ஒருவரை நிறுவனத்தின் மனித வள மேலாளர் முத்தையா மற்றும் விடுதி காப்பாளர் லதா ஆகியோர் லத்தியால் அடித்தும், காலால் உதைத்தும் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இது தொடர்பாக போலீசார் இருவர் மீது பெண் வன்கொடுமை உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இது தொடர்பாக திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க சிஐடியு தொழிற்சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் வந்திருந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலகம் முன்பு தனித்தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாலை நிர்வாகத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரியும்,  கோவையில் செயல்பட்டு வரும் 300க்கும் மேற்பட்ட பஞ்சாலைகளில், பல நிர்வாகத்தினர், இளம்பெண்களை கேம்ப் தொழிலாளிகள் என்ற பெயரில் கொத்தடிமைகளாக அடைத்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

இதனை மாவட்ட நிர்வாகம் நேரில் சென்று ஆய்வு செய்வதோடு, கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருப்போரை உடனடியாக மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

முன்னதாக சிஐடியு ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி நிர்வாகிகள் மனோகரன், ரபீக், ரத்தினகுமார் உழைக்கும் பெண்கள் ஒருங்கினைப்பு குழுவின் அமைப்பாளர் சி.லலிதாமணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

இதேபோன்று மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

;