தமிழகத்தில் மக்கள் தொகை அடிப்படையில் ஆரம்பச் சுகாதார நிலையங்களை, மேம்படுத்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையங்களாக மாற்றுவதற்கு ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 163.3 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய உயர் சிறப்பு மருத்துவ கட்டிடம் மற்றும் 2.45 கோடி மதிப்பீட்டில் நீராவி சலவை வசதி கட்டிடம் கட்டுவதற்குத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொள்ளாச்சியிலிருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியும், திறந்தும் வைத்தார்.கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களைப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர்,
தமிழகத்தில் புற்றுநோயைத் துல்லியமாகக் கண்டறிவதற்கு இரண்டு இடங்களில் மட்டுமே பெட் சிடி ஸ்கேன் இருந்ததாகவும் தற்போது கோவை,சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர்,காஞ்சிபுரம் போன்ற 5 மாவட்டங்களில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைகளிலும் இந்த பெட் சிடி ஸ்கேன்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிலிருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். இன்று கோவை அரசு மருத்துவமனையில் 26 கட்டண படுக்கையறைகள், 100 தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள், 300 படுக்கை வசதிகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் இந்த மருத்துவமனைக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.மேலும் வால்பாறை,உடுமலைப்பேட்டை ,வீரபாண்டி, ஈரோடு,சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் புதிய கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளதாகவும் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மருத்துவத் துறைக்கு என 397.71 லட்சம் ரூபாய் மதிப்புள்ளபணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கோவை அரசு மருத்துவமனையில் மழைக் காலங்களில் எற்படும் நீர் தேக்கத்தைப் போக்கும் விதமாக 10 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது எனவும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 4 மாவட்டங்களுக்கும் மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையிலான மருத்துவத்துறை அறிவிப்புகள் பெரிய அளவில் அறிவிக்கப்பட்டிருக்கிறது எனவும் கூறியதுடன்,அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கையறைகள் படிப்படியாகத் துவங்கப்பட உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.இந்தியாவில் முதன்முறையாகத் தமிழக சுகாதாரத்துறையில் புதிய தேர்வாளர்களுக்கு கவுன்சிலிங் வைத்து காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் ஊட்டியில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு தற்போது காலிப்பணியிடங்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் மருத்துவ தேர்வாணையம் மூலமாக 1250 பேர் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு அடுத்த ஒரு வாரத்தில் வழங்க இருக்கிறோம் என்றும் கூறினார். ஏற்கனவே மருத்துவத் தேர்வாணையத்தில் தேர்வு முடிந்து வழக்குகள் காரணமாக நிலுவையில் இருப்பது மருந்தாளுநர்களுக்கான 986 பணியிடங்கள் என்றும் அதுவும் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் அந்த வழக்கும் முடிய இருப்பதால் அந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் 166 சுகாதார பணியாளர்கள் பணியிடங்கள் முழுமை பெற்றுள்ளதாகவும் அந்த வழக்கும் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பதால் அதுவும் முடிவுக்கு வரும் என்றும் 2281 கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடம் நிரப்புவது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் கூடிய அவர்,கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் 331 ஆய்வக நுட்பனர்கள் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அடுத்த மூன்று நான்கு இடங்கள் அடுத்த ஒரு மாதத்தில் முடிவடையும் எனவும், மக்கள் தொகை அடிப்படையில் ஆரம்பச் சுகாதார நிலையங்களை, மேம்படுத்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையங்களாக, மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.தமிழகத்தில் அம்மை நோய் பரவுதல் குறித்து எந்தவித அச்சமும் தற்போது இல்லை என்றும் பொதுச் சுகாதாரத் துறை சார்பில் நாளை அல்லது நாளை மறுநாள் ஆண்டுதோறும் வழங்கப்படும் விழிப்புணர்வு வழங்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.