districts

img

கார்ப்ரேட்டுகளின் நலனுக்காக சிறுகுறு, நடுத்தர தொழில்களை படுகுழியில் தள்ளுகிறது மோடி அரசு :ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கார்ப்ரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்ப்பதற்கும் அதன் நலனை பாதுகாப்பதற்கும் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு கேந்திரமாய் இருக்கிற சிறுகுறு, நடுத்தர தொழில்களை படுகுழியில் தள்ளுகிறது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு என ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் ஒரு நாள் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் அறைகூவல் விடுத்தது. இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

 இதன் ஒரு பகுதியாக குறுந்தொழில் முனைவோருக்கு ஆதரவாக  கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை சிவானந்தா காலனி பவர்ஹவுஸ் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மூலப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், சிறுகுறு தொழில்களை பாதுகாக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மூத்த தலைவர்கள் யு.கே.வெள்ளிங்கிரி, எஸ்.ஆறுமுகம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மூலப்பொருட்களின் விலை உயர்வால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், குறுந்தொழில் நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால் குறுந்தொழில் முனைவோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற ஒன்றிய அரசின் மோசமான பொருளாதார நடவடிக்கையின் காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கடந்த ஏழு வருடங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் 10.5 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை ரத்து செய்யப்பட்டுள்ளது கடந்த நான்கு வருடங்களில் அதானி கம்பெனிகளின் சொத்து மதிப்பு 756 சதவிகிதம் அதிகரித்துள்ளது. முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 250 சதவீதம்  அதிகரித்து உள்ளது. ஆனால் மறுபுறம் சிறு தொழில்கள் மூடப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில்தான் இந்த மூலப்பொருள் விலை உயர்வும் உள்ளது. இதன் காரணமாக 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளது. இது தொழில்முனைவோர் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும். வேலை வாய்ப்பு பறிபோகும். மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து இந்த தொழில்முனைவோர்கள் கோரிக்கை வைத்தும் ஒன்றிய மோடி அரசு செவிசாய்க்கவில்லை.

ஆகவே வேறுவழியின்றி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். கார்ப்ரேட்டுகளின் நலனுக்காக இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுனையாக உள்ள, வேலை வாய்ப்பை தருகிற, சிறுகுறு, நடுத்தர தொழில்களை படுகுழியில் மோடி அரசு தள்ளுகிறது. ஆகவே நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த தொழில்முனைவோர்கள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு தருகிறது. இவர்களுக்கு ஆதரவாக நாங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் தொழில்முனைவோர்களுக்கு ஆதரவாக கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது என்றார். 

 

;