districts

img

துண்டிக்கப்பட்ட கைகளை பொருத்தி அரசு மருத்துவமனை சாதனை

குடும்பத்தகராறு முற்றி நடைபெற்ற சண்டையில் ஒரு கை இரண்டு துண்டான நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் கையை வெற்றிகரமாக பொருத்தி அரசு மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறுகையில், கடந்த 8ம் தேதி 21-வயதான  கணேஷ் என்னும் ஒரிசா மாநில இளைஞர், அவருக்கு தெரிந்த நபரால் குடும்பத் தகராறு காரணமாக, அரிவாளால் வெட்டப்பட்டு வலது கை துண்டிக்கப்பட்ட நிலையிலும், தலை, கழுத்து, முதுகுப் பகுதியிலும் வெட்டுக் காயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு  மருத்துவமனையில் 8 ஆம்தேதி அனுமதிக்கப்பட்டார். 

அதிக காயங்களால் இரத்த இழப்பு ஏற்பட்டிருந்தது, திருப்பூர் அரசு மருத்துவமனையில், இவரது துண்டிக்கப்பட்ட கைப் பகுதியினை சுத்தமாக ஈரத்துணியில் சுற்றி பிளாஸ்டிக் பையில் வைத்துக் கட்டி, அதனை ஜஸ்கட்டிகள் நிறைந்த பெட்டியில் வைத்து கைப்பகுதி நேரடியாக ஜஸ்கட்டியில் படாதவாறு பாதுகாத்து எடுத்து வந்திருந்தனர்.

மேலும் அவரை பரிசோதித்த கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள், துறைத் தலைவர், வி.பி, ரமணன், மருத்துவர்களான செந்தில்குமார், பிரகாஷ், கவிதாபிரியா, சிவக்குமார், மயக்கவியல் நிபுணர் சதிஷ், ஆகியோர் இனைந்து, துண்டிக்கப்பட்ட கையினை இணைக்க முடிவு செய்தனர், உடனடியாக அவருக்கு இரத்தம் செலுத்தப்பட்டு, அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்பட்டது, காலை 8 மணியளவில் அறுவைசிகிச்சை தொடங்கப்பட்டு,  5 மணி நேரத்திற்கும் மேலாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு எலும்புகள், தசை நரம்புகள், இரத்தக் குழாய்களையும் இணைத்து துண்டிக்கப்பட்ட கைக்கு உயிர் ஊட்டி உள்ளனர்,  இன்று அந்த, இளைஞர் நல்ல ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் உள்ளார்.

அந்த இளைஞருக்கு பல இலட்சங்கள் மதிப்புடைய உயர்தர அறுவை சிகிச்சையை பிளாஸ்டிக் சர்ஜரி துறை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர் என்றார்.

முன்னதாக வெற்றிகரமான அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு டீன் நிர்மலா உள்ளிட்ட சக மருத்துவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதுபோன்ற உடல் உறுப்புகள் துண்டானால் அதனை இணைக்க தனியார் மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் பணம் கட்டணமாக பெருகிற நிலையில், எந்த கட்டணங்களும் இல்லாமல் அரசு மருத்துவமனை சத்தமே இல்லாமல் சாதனை படைத்து அரசு மருத்துவமனையின் மீது எளிய மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.