districts

img

கோவையில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 9 வயதி சிறுமி பலி!

கோவை பேரூர் பச்சாபாளையம் அருகே தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற 9 வயது மாணவி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரன். இவர் கடந்த 5 ஆண்டுகளாகக் கோவை பேரூர் பச்சாபாளையம் பாரதியார் வீதியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்,. இவரது மனைவி செண்பக வள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஹரிஸ் (11) என்ற மகனும், 3 ஆம் வகுப்பு படிக்கும் கோகுலப்பிரியா (9) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்பவரது மகள் மகாஸ்ரீ என்ற சிறுமியின் பிறந்த நாள் கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதற்காக இரவு சிறுமி கோகுலப்பிரியா சென்றுள்ளார். ஆனால் இரவு 10 மணியாகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த சிறுமியின் தாய் செண்பகவள்ளி, பவித்ராவின் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். ஆனால் சிறுமி அங்கும் இல்லாததால் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர்.

இறுதியாக பவித்ரா வீட்டின் வாசலிலிருந்த கீழ் நிலை தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்த போது அதில் சிறுமி கோகுலப்பிரியா சுயநினைவின்றி மிதந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்குச் சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சிறுமியின் தாய் செண்பகவள்ளி, மரணத்தில் சந்தேகம் உள்ளதாகப் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;