சீர்காழி, மே 20-கொள்ளிடம் ஒன்றியத்தில் இருந்த 500-க்கும் மேற்பட்ட குளங்களில் தற்போது 250 குளங்கள் மட்டுமே இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். எனவே இருக்கின்ற பாசன வடிகால் வாய்க்கால், குளங்களையாவது தூர்வாரி பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தன. ஊராட்சி நிர்வாகத்துக்குட்பட்ட இந்த பொதுக்குளங்களின் எண்ணிக்கை தற்போது 250 ஆக குறைந்து விட்டதாக மக்கள் கூறுகின்றனர். மீதமுள்ள குளங்கள் இருந்த இடத்திற் கான தடயம் கூட இல்லாமல் போய்விட்டது. சில குளங்கள் இருந்த இடங்களில்தற்போது கட்டிடங்கள் காணப்படு கின்றன. சில குளங்கள் ஆக்கிர மிப்பில் உள்ளன. சில குளங்கள் தூர்வாராமல் தூர்ந்து போய் உள்ளன. இந்நிலையில் போதிய மழை இல்லாமல் போனதால் நிலத்தடி நீர் அதலப் பாதாளத்திற்கு சென்று விட்டது.நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளவை குளங்கள் ஆகும். எனவே அனைத்து குளங்களையும் அகலப்படுத்தியும் ஆழ்படுத்தியும் தூர்வார வேண்டும். இந்த கோடை காலத்திலேயே குளங்களை தூர்வார வேண்டும். இதே போல் கொள்ளிடம் பகுதி பிரதான பாசன வாய்க்காலாக இருந்து வரும் தெற்குராஜன் வாய்க்கால், புதுமண்ணியாறு மற்றும் பொறை வாய்க்கால் ஆகிய பிரதான பாசனவாய்க்கால்களையும் 500-க்கும் மேற்பட்ட பாசன கிளை வாய்க்கால்கள்மற்றும் வடிகால் வாய்க்கால்களையும் போர்க்கால அடிப்படையில் தூர்வாரி ஆழ்படுத்தி சீரான பாசன வசதியை செய்து தரவும், நிலத்தடி நீரை சேமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.