districts

img

சுடுகாட்டுக்கு இடமும் இல்லை வழியுமில்லை: ஆற்றை கடக்கும் தலித் மக்கள்

கிருஷ்ணகிரி, அக். 22- கிருஷ்ணகிரி மாவட்டம், மணியம்பாடி கிராமத்தில் சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்க வேண்டும், ஆற்றைக் கடக்க தரைப்பாலம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாயிகள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.           தேன்கனிக்கோட்டை வட்டம் இருதுக்கோட்டை ஊராட்சிமன்றம் மணியம்பாடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் 60க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசிக்கும் சுடுகாட்டிற்கு  தனி இடம் ஒதுக்கவில்லை. இதனால் இந்த கிராம மக்கள் இறந்தவர்களை சொந்த நிலங்களிலும், நிலமற்றவர்கள் புறம்போக்கு நிலங்களிலும் அடக்கம் செய்து வருகின்றனர்.  மணியம்பாடி காட்டாறை கடந்து சென்று மறு கரையில் உள்ள புறம்போக்கு நிலத்தில் அடக்கம் செய்யும் அவலம் உள்ளது. சிறு மழை பெய்தால் கூட மலைப்பகுதியை ஒட்டியுள்ள இந்த காட்டாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பதால் தலித் மக்கள் இறப்பவர்களை தூக்கிக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கி மறுகரைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. ஆற்றுக்குள் இறங்கி செல்லும் போது தடுமாறி விழுந்து பலர் ஆற்றில் அடித்துச் சென்றுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு மணியம்பாடியில் தலித் பெண் மாதம்மாள் இறந்து போனார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக ஆற்றை கடக்கும் போது, பலர் தடுமாறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டு படுகாயத்துடன் உயிர் பிழைத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும், மணியம்பாடி காட்டாற்றைக் கடந்து செல்ல தரைப்பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.

;