districts

மலக்குழியில் பலியான தொழிலாளர்கள் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

காஞ்சிபுரம், அக் 21 - திருப்பெரும்புதூர் சத்யம் கிராண்ட் சொகுசு உணவக கழிவுநீர் தொட்டியில் மரணமடைந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அரசுப் பணியும் ரூ.25 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருப்பெரும்புதூரில் உள்ள தனியார் உணவகத்தின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது பலியான கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன், நவீன் , திரு மலை  ஆகியோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், “உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்” என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். மேலும், மூன்று தொழிலாளிகள் பலியானதற்கு காரணமான தனியார் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாக்கடைக்குள் மனி தர்கள் இறங்கி விஷவாயு தாக்கி உயிரிழப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் இது போன்ற மரணங்கள் இனியும் நடை பெறாமல் இருக்க உரிய நட வடிக்கைகள் எடுக்க வேண்டு மெனவும் அவர் கேட்டுகொண்டார். தனியார் தொழிற்சாலை நிறைந்த இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது  இத்தகைய உயிரிழப்பு சம்பவம் நிகழ்வது தொடர் கதையாகி வருகிறது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை தொடர்பு கொண்டு கேட்ட போது, “விபத்து ஏற்படும் வகையில் செயல்பட்டது, மாவட்ட நிர்வாகம் அனுமதி இல்லாமல் கழிவு நீரை அகற்றியது, எஸ்சி, எஸ்டி பணி யாளர்களை பயன்படுத்தியது, மனிதக் கழிவுகளை மனிதர்களை அகற்ற பயன்படுத்தியது, எந்த ஒரு உயிர் காக்கும் உபகரணங்கள் இல்லாமல் கழிவு நீர் தொட்டியில் பணியாற்றியது உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்”என்றார்.

;