districts

img

பேருந்து வசதி கேட்கும் தானம் கிராமம்! மாணவர்களின் சோக கானம் மாறுமா...?

பள்ளிக்கு சென்று படிப்பதற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என ஏக்கத்துடன் கேட்கும் தானம் கிராம பள்ளி மாணவ, மாணவியரின் ஏக்கத்தை மாவட்ட நிர்வாகம் தீர்த்து வைக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் தானம் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட தானம் கிராமத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை படிக்கும் வயதில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உள்ளனர். இக்கிராமத்தில் தொடக்கப்பள்ளி மட்டும் இருக்கும் நிலையில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிப்பதற்கு சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அதையூர் கிராம அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்றாக வேண்டும்.

ஆனால் இடையில் உள்ள இந்த 3 கிலோ மீட்டர் தூரமும் மாணவ, மாணவியர் நடந்துதான் செல்ல வேண்டும். இது வனப்பகுதி என்பதாலும், பேருந்து வசதி இல்லாததாலும் அச்சத்தின் காரணமாக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை உள்ளூரில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் படிக்க வைத்து நிறுத்திவிடும் நிலை உள்ளது.

படிக்கும் பருவத்தில் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இருந்தாலும் இந்த மூன்று கிலோமீட்டர் தூரத்தையும் நடந்து சென்று 6ஆம் வகுப்பில் 2 மாணவர், 4 மாணவியர், 7ஆம் வகுப்பில் 3 மாணவர், 5 மாணவியர், 8ஆம் வகுப்பில் 4 மாணவர், 6 மாணவியர்,  9 ஆம் வகுப்பில் 7 மாணவர், 4 மாணவியர், 10ஆம் வகுப்பில் 2 மாணவர், 5 மாணவியர் மட்டுமே அதையூர் பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

இப்படி மொத்தம் 19 மாணவரும், 24 மாணவியரும் என 43 பேர் மட்டுமே அதையூர் கிராமத்திற்கு நடந்து சென்று கல்வி பயின்று வருகின்றனர். மீதமுள்ள கல்வி பயிலும் பருவ வயதுடைய மாணவ, மாணவியர் பள்ளிக்கு செல்ல இயலவில்லை.மேலும் 6 முதல் 10 ஆம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளையும் இடையில் நிறுத்திவிடும் சூழலால் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது.

இதுபற்றி அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் வி.சின்ராசு, துணை நிர்வாகிகள் ஜெ.டார்வின், பி.சேகுவேரா ஆகியோர் நேரில் தானம் கிராமத்திற்குச் சென்று பொதுமக்களையும், அதையூர் கிராம பள்ளிக்கு சென்று மாணவர்களையும் நேரில் சந்தித்து பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் இதுகுறித்து எம்.கே.பழனி, வி.சின்ராசு ஆகியோர் கூறும்போது; "உடனடியாக கள்ளக்குறிச்சியில் இருந்து அதையூர் கிராமம் வரை வந்து செல்லும் நகரப் பேருந்து தடம் எண் 2 ஐ மூன்று கிலோமீட்டர் தூரம் நீட்டித்து தானம் கிராமம் வரை சென்று மாணவ, மாணவியரை ஏற்றி வர வசதி செய்திட வேண்டும். கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் சூழல் தமிழகத்தில் எந்த ஒரு குழந்தைக்கும் ஏற்படாத நிலையை  உருவாக்கிட தமிழக முதல்வர் முனைப்பு காட்டி வருகிறார்.

இச்சூழலில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியரின் கல்வி வாய்ப்பு பேருந்து வசதி இல்லாத காரணத்தால் மறுக்கப்படுவது அநீதியானது. எனவே மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து கழக நிர்வாகமும் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்" என வலியுறுத்தினர்.

;