districts

நலத்திட்ட உதவிகளுக்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்கலாம்

கள்ளக்குறிச்சி, செப்.24- கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் கோரிக்கை மனுக்களை அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவல கங்களில் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு நேரில் வந்து மனுக்களை அளிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து வந்து செல்கின்றனர். இந்நிலை யில் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி தங்களுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் கோரிக்கை மனுக்களை தங்கள் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கலாம்.  அவ்வாறு மாற்றுத்திறனாளிகள் வழங்கும் மனுக்களை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்று தேவையான நடவடிக்கை மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் தங்க ளுக்கு தேவையான உதவி உபகரணங்கள், இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், செயற்கை அவயம், சக்கர நாற்காலி, காதொலி கருவி, செல்போன், வங்கி கடன், மாதாந்திர உதவித்தொகை மற்றும் இதர உதவிகள் கோரும் மனுக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பித்து பயனடையலாம். அனைத்து உதவிகளுக்கும் வருமான சான்று தேவையில்லை. வட்டாட்சியர் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகள் கோரும் விண்ணப்பங்கள் மற்றும் அனைத்து விதமான கோரிக்கை மனுக்களையும் பெறுவதற்கு சிறப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;