districts

உள்ளாட்சித் தேர்தல் பள்ளப்பட்டி பட்டியலின மக்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும் சிபிஎம் வலியுறுத்தல்

கரூர், ஜன.30 -  பள்ளப்பட்டி நகராட்சியில் பட்டியலின மக்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்யாமல் பட்டியலின மக்களை புறக்கணித்து தேர்தல் நடத்தும் கரூர் மாவட்ட நிர்வாகம், பட்டியலின மக்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்த பின்பே தேர்தல் நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம், பள்ளப்பட்டி நகராட்சியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. பள்ளப்பட்டி பேரூராட்சியாக இருந்து, தமிழக அரசால் சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கரூர் மாவட்டத்தின் முக்கிய நகரமாக பள்ளப்பட்டி நகராட்சி உள்ளது. தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் நகர மன்ற தலைவர் பதவிக்கு மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 கடந்த உள்ளாட்சி தேர்தல் வரை 18 வார்டுகளை கொண்ட பேரூராட்சியாக பள்ளப்பட்டி  செயல்பட்டு வந்தது. சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கக் கூடிய பள்ளப்பட்டியில், 2000 பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த தேர்தல் வரை 18 வார்டுகளில் ஒரு வார்டு பட்டியலின மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.  தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டு வார்டு ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பட்டியலின மக்களுக்காக எந்த ஒரு வார்டும் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. எனவே கரூர் மாவட்ட ஆட்சியர், இதன் மீது கவனம் செலுத்தி பட்டியலின மக்களுக்கான வார்டை ஒதுக்கீடு செய்த பிறகு, தேர்தல் நடைபெற அனுமதிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரையும், மாநில தேர்தல் ஆணையத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;