கடலூர், ஏப். 22- கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியர் முன்பு அமர்ந்து விவசாயிகள் வெள்ளி யன்று(ஏப்.22) தர்ணாவில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைக் கேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான கூட்டம் ஆட்சியர் கி.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் துவங்கியதும் ஆட்சியர் முன்பு தரையில் அமர்ந்து விவசாயிகள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். பட்டா மாற்றம், பட்டாவில் உட்பிரிவு மாற்றங்களுக்கு பணம் செலுத்தியும் பல மாதங்களாக இழுத்தடிக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை. குறைகேட்புக் கூட்டங்களில் கேட்கப்படும் பல்வேறு கேள்விகளுக்கு முறையாக பதில் அளிப்பதில்லை. விவசாயிகள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. விவசாயிகளுடன் ஆட்சியர் சுமூக உறவை வளர்த்துக் கொள்ளவில்லை என்றனர். பிறகு நடைபெற்ற பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். பின்னர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கோ.மாதவன் பேசுகையில், “நவரை அறுவடை நடைபெற்று வருவதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது. மின்தடையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். விவசாயிகள் கூட்டமைப்பு பெ.ரவீந்திரன்,“ வாய்க்கால் தூர்வாருவதற்காக ரூ.8.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், வாய்க்காலை சீரமைப்போர் படுகை மட்டத்தை கவனிக்காமல் ஆழப்படுத்தி வருகின்றனர். விளை நிலங்களை வீட்டுமனைகளாக விற்பனை செய்யும் போது வாய்க்கால் ஆக்கிரமிக்கப்படுகிறது. மாவட்டத்தில் ரூ.55 கோடியில் ஏரிகள் தூர்வாரப்பட்தாக என்எல்சி நிர்வாகம் சொல்வதில் விவசாயிகளுக்கு உடன்பாடில்லை. எனவே, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். சிதம்பரத்தில் நடைபெறும் ஒழுங்குமுறை விற்பனை கூட பணி களை துரிதப்படுத்த வேண்டும்” என்றார்.