districts

கமிஷன் கொடுத்தால்தான் 100 நாள் வேலை திட்ட நிதி ஒதுக்கீடு ?

 கடலூர்,மார்ச் 10-  பண்ருட்டி ஒன்றிய பெருந்தலைவருக்கு 3 விழுக்காடு கமிஷன் கொடுத்தால் தான் 100 நாள் வேலை திட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கறாராக கூறப்பட்டுள்ளதற்கு பண்ருட்டி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் கூட்டம் அதன் தலைவர் வசந்தகுமாரி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பண்ருட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி வளர்ச்சி திட்டங்களை 14, 15வது நிதிக்குழு மானிய திட்ட நிதிகள் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட நிதியின் மூலம் நடைபெறக்கூடிய பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்க வேண்டுமானால், ஒன்றிய பெருந்தலைவர்  பாலமுருகனுக்கு  3 விழுக்காடு கமிஷன் கொடுத்தால் மட்டுமே, நிர்வாக அனுமதி வழங்கமுடியும் என ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (பிடிஓ) தெரிவிக்கின்றனர். இதனால், ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் தடைபடுகிறது. கமிஷன் தரவில்லை என்றால் ஆளும் கட்சியினரை வைத்துக்கொண்டு ஊராட்சியின் பணிகளை நாங்களே செய்வோம் எனவும், பஞ்சாயத்தின் நிர்வாகத்தினை மூடக்குவோம் என்றும் மிரட்டுகிறார்கள். இந்த நடவடிக்கை தமிழக அரசின் மீது  அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, இப்பிரச்சனை சம்மந்தமாக,  மாவட்ட அதிகாரிகள் கவனத்திற்கும், மாநில முதல்வர் கவனத்திற்கும் கொண்டு செல்கின்ற வகையில் வரும் வரும் 23 ஆம்தேதி பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய ஆலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதெனவும், மேலும், இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவில்லை என்றால், தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்குவதெனவும் பண்ருட்டி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;