விருதுநகரில் உள்ள தூய இன்னாசியார் தேவலாயத்தில் மாரியம்மன் கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்த வந்த பக்தர்கள் தங்க இடமளித்து உதவி புரிந்தது மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாய் அமைந்தது.
விருதுநகர் நகராட்சி சாலையில் உள்ளது பாரம்பரியம் மிகுந்த தூய இன்னாசியார் தேவலாயம். இங்கு நாள்தோறும் கிறிஸ்தவ மக்கள் வந்து ஜெப வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், விருதுநகரில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று மாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைதொடர்ந்து திங்கள் கிழமை பக்தர்கள் அக்னிச் சட்டி ஏந்தி நேர்த்திக் கடனை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்த வருவது வழக்கம். அவர்கள் தங்களது உடைமைகள் மற்றும் உணவுப் பொருட்களை வைப்பதற்கு இடமின்றி தவித்து வந்தனர்.
அப்போது பக்தர்கள், ஆலய வளாகத்திற்குள் தங்குவதற்கு தூய இன்னாசியார் தேவாலய பங்குத் தந்தை அனுமதி வழங்கினார். இதனால், இந்து பக்தர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து, தூய இன்னாசியார் தேவாலயத்தின் நிர்வாகிகளிடம் கேட்ட போது, ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா விருதுநகரில் நடைபெற்று வருகிறது. இதையொட்டியே ஈஸ்டர் பண்டிகையும் வரும். அம்மாதத்தில், இந்து மக்கள், மாரியம்மனுக்காக நோன்பு இருப்பார்கள். கிறிஸ்தவ மக்கள், ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு வரும் தவக்காலத்தில் 40 நாட்கள் நோன்பு இருப்பார்கள்.
இந்த வேளையில் இருமதங்களின் திருவிழாக்களும் அடுத்தடுத்து விருதுநகரில் நடைபெறும். அந்த நேரத்தில், ஒருவருக்கு ஒருவர் உதவுவது தான் மனிதப் பண்பு. இதைத்தான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன. அதனடிப்படையில், பல ஆண்டுகளாக இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் தங்குவதற்கு தூய இன்னாசியார் தேவாலய வளாகத்தை நாங்கள் இலவசமாக வழங்கி வருகிறோம்.
பக்தர்களுக்கான கழிப்பிட வசதி, குடிநீர் வசதிகளையும் இங்கு செய்து தருகிறோம். இதுவே விருதுநகரின் மதநல்லிணத்திற்கு நல்லதொரு அடையாளம் ஆகும் என தெரிவித்தனர்.