வேலூர், மார்ச் 15 - வேலூர் அருகே பொது பயன்பாட்டில் 50 ஆண்டுகளாக இருந்து வந்த சாலையை தனியார் மருத்துவமனை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர். வேலூர் அலமேலுமங்காபுரம் அடுத்த ஏரியூர் பாறை வீதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பம் உள்ளன. இங்கு வசித்து வரும் மக்கள் 50 ஆண்டு காலமாக பொது வழியாக பயன்படுத்தி வந்த நிலம் அருகில் உள்ள நிலத்தை தனியார் மருத்துவமனை ஒன்று விலைக்கு வாங்கியுள்ளது. தற்போது அந்த மருத்தவமனை நிர்வாகம், 10 அடி அகலமும், 100 அடி நீளமும் கொண்ட நிலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது வழியையும் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அந்த கிராம மக்கள் மருத்துவமனையை நிர்வாகத்தை அணுகியபோது, பொதுப்பாதையாக பயன்படுத்தி வந்த நிலத்தையும் சேர்த்து தான் விலைக்கு வாங்கியிருப்பதாக கூறியுள்ளது. இதனையடுத்து, தனியார் மருத்துவ மனையின் இந்த அராஜகத்தை கண்டித்தும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமிப்பு அகற்றக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பிறகு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.