கரூர், பிப்.18- கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிழக்கு காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குச் சொந்தமான அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து இருந்தார். அந்த இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறை மூலமாக கடந்த ஓராண்டுக்கு முன் ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் கம்பி வேலியை அகற்றிவிட்டு அந்த இடம், தங்களுக்குச் சொந்தம் என்று கூறிவந்தனர். அந்த இடத்தில் பேரூராட்சி சார்பில், பொதுமக்களுக்கு பொதுக் கழிப்பிடம் கட்டிக் கொடுப்பதற்கு பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை பேரூராட்சியின் சார்பில், ரூ.9.96 லட்சம் மதிப்பிலான பொதுக் கழிப்பறை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. அப்போது பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனி நபர், தங்களது குடும்பத்துடன் வந்து அந்த இடத்தில் பூமி பூஜை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து இடையூறு செய்தனர். அவர்களை, காவல்துறை உதவியுடன் பேரூராட்சி அதிகாரிகள் தடுத்து, மீண்டும் பொது இடத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) ருக்குமணி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. பேரூராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக ஊர் பொதுமக்கள் திரண்டு இருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விதொச சார்பில், பேரூராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமான பொது இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதைக் கண்டித்தும், உடனடியாக நிலத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அப்பகுதி பொதுமக்களை திரட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக பேரூராட்சி நிர்வாகம் பொது இடத்தை மீட்டு, அந்த இடத்தில் பொதுமக்களுக்கு பொது கழிப்பறை கட்டுவதற்கான கட்டுமான பணிகளை தொடங்கி உள்ளது. இந்த அமைப்புகள் மட்டும் இல்லை என்றால், இந்த இடத்தை மீட்டு இருக்க முடியாது என்றும், எங்களுக்கு பாதுகாப்பாகவும், கோரிக்கையை நிறைவேற்ற தொடர்ந்து உறுதுணையாகவும் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகளுக்கு எப்போதும் எங்கள் ஊர் மக்கள் உறுதுணையாக இருப்பதுடன், அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்தனர். மேலும் விரைந்து நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு கட்டுமான பணிகளை தொடங்கிய கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர், பேரூராட்சி நிர்வாகம், மாயனூர் காவல்துறையினர் அனைவருக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளர் ஜி.தர்மலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் நாகராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.