முத்துப்பேட்டை, பிப்.22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துப்பேட்டை நகரம், ஒன்றியம், திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியங்களின் அகில இந்திய மாநாட்டு நிதியை அளிக்கும் பேரவை திருத்துறைப்பூண்டி ஒன்றியம், பாண்டி கிராமத்தில் முதல் ஒன்றியச் செயலாளர் தோழர் வி. முத்துவீரன் நினைவு தினமான சனியன்று நடைபெற்றது. முன்னதாக, தோழர் வி.முத்துவீரன் அவர்களது 23 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவு ஸ்தூபிக்கு இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். பின்னர், ஒன்றிய கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பெண் தோழர்கள் பெ. சண்முகத்திற்கு ஆரத்தி எடுத்து, முழக்கங்களுடன் வரவேற்றனர். பின்னர், பேரவை நடந்த அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் வி. முத்துவீரன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, பெ. சண்முகம் மரியாதை செலுத்தினார். முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் கே. பழனிச்சாமி தலைமையில் பேரவையில் நடந்த முத்துப்பேட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல் மார்க்ஸ், முத்துப்பேட்டை நகரச் செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். பேரவையில் முத்துப்பேட்டை நகரம், ஒன்றியம், திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய கட்சி இடைக் கமிட்டிகளின் சார்பாக அகில இந்திய 24 ஆவது மாநாட்டு நிதி ரூபாய் இரண்டு லட்சம் மாநிலச் செயலாளரிடம் அளிக்கப்பட்டது. பேரவையில் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு பிரகாஷ், முன்னாள் மாவட்டக் குழு டி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினார்கள். மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சிறப்புரையாற்றினார். பேரவையில் கட்சி உறுப்பினர்கள் 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.