திருச்சிராப்பள்ளி, பிப்.22- திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 16 மற்றும் 35 வார்டு பகுதிகளான தெற்கு உக்கடை, வடக்கு உக்கடை பகுதி சர்வீஸ் சாலைகள் மற்றும் அதனை இணைக்கும் சுரங்கப்பாதை சாலை ஆகியவற்றைச் சரி செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையொட்டி, கடந்த 24.11.2024 அன்று வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், ஒரு வார காலத்திற்குள் சாலைகள் சரி செய்யப்படும் என எழுத்துப் பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இது நாள் வரை சாலைகள் சரி செய்யப்படாததைக் கண்டித்தும், உடனடியாக இந்த சாலைகளை சரி செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 4 நாட்களுக்கு முன் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் செல்வராஜ், சாகுல் ஹமீது, பொன்மகள், முகமது பாஷா ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் சனிக்கிழமை, திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பகுதியில் ஒன்று திரண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எவ்வித பணியும் நடைபெறவில்லை எனக்கூறி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், சீனிவாசன், பாலக்கரை பகுதிச் செயலாளர், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், பாலக்கரை பகுதிக்குழு உறுப்பினர் கனல் கண்ணன் ஆகியோர் பேசினர். இதுகுறித்து, தகவல் அறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலைப் பணி உடனடியாக துவங்கப்படும் என உறுதியளித்து, பணியை உடனே துவங்கினர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.