திருவாரூர், நவ. 30 - திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள சம்பா, தாளடி பயிர்ப் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு கூட்டம் நீடாமங்கலத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். கலைமணி தலைமையில் நடைபெற்றது. மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்டக்குழு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “கடந்த வாரத்தில் இருந்து விட்டு விட்டு பெய்யும் கனமழை மற்றும் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் திருவாரூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள இளம் பயிர்கள், மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையிலும், அறுவடை நிலையில் உள்ள பயிர்கள் நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாமலும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அச்சத்தில் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக கள ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது. “மாவட்டத்தில் உள்ள தொகுப்பு வீடுகள் கனமழையால் மோசமாக பாதிப்படைந்துள்ளன. எனவே, 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடு கட்டித்தர வேண்டும், பழுதடைந்த வீடுகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும், கனமழையால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு வீடு கட்டும் திட்டத்தில் முன்னுரிமை வழங்கிட வேண்டும், கனமழையால் வேலையிழந்த கூலித் தொழிலாளர்கள் மற்றும் உயிரிழந்த கால்நடைகளுக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும்” என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், டிசம்பர் 6, 7, 8 ஆகிய தினங்களில் நன்னிலம் ஒன்றியம், கொல்லுமாங்குடியில் நடைபெறும் கட்சியின் திருவாரூர் மாவட்ட 24-ஆவது மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்தும் மாவட்டக்குழு கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.