districts

img

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து சிபிஎம் தலைமையில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.22-  திருச்சி திருவெறும்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள பர்மா காலனி, திடீர் நகர், காவேரி நகர் பகுதிகளில், சுமார் 315 வீடுகளில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர். தற்பொழுது இந்த மக்கள் குடியிருக்கும் பகுதி ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  மேலும் இங்குள்ள குடியிருப்புகளை காலி செய்யச் சொல்லி அப்பகுதியில் அறிவிப்பு போர்டு வைத்துள்ளது. இதற்கு, அப்பகுதியில் குடியிருந்து வரும் மக்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே விரிவாக்கத் திட்டங்களுக்கு எனக் கூறி, திருவெறும்பூர் பர்மா காலனி, திடீர் நகர், காவிரி நகர் பகுதிகளில் 4 தலைமுறையாக இருந்து வரும் 315 குடியிருப்புகளை அகற்ற முயலும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும், ரயில்வே விரிவாக்க திட்டங்களுக்கு காலியிடங்களை பயன்படுத்த வேண்டும். குடியிருக்கும் வீடுகளை இடிக்க கூடாது. இப்பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு மாற்று இடம், குடியிருப்பு ஒதுக்கீடு செய்யாமல் குடியிருக்கும் வீடுகளை இடிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பெயரில், மக்களின் வாழ்விட உரிமையைப் பறிப்பதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் சனிக்கிழமை திருவெறும்பூர் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் பகுதிச் செயலாளர் மணிமாறன், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர். ரவிக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், கட்சியின் மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லெனின், செயலாளர் சேதுபதி, விவசாயிகள் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் கே.சி. பாண்டியன், நித்யா, முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில், திருவெறும்பூர் பர்மா காலனி, திடீர் நகர், காவேரி நகர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, கடைவீதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தனர்.