சேதமடைந்த நிழற்குடை: சீரமைக்க பயணிகள் கோரிக்கை
பாபநாசம், பிப்.22- பாபநாசத்தில் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் பேருந்து பயணியர் நிழற் குடை சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த நிழற்குடையின் அளவு சிறி தாக இருப்பதால், சில பயணிகளால் மட்டுமே நிற்க, உட்கார முடிகிறது. பலர் சாலையோரம் நிற்கின்றனர். மழை, வெயில் நாட்களில் வயதானவர்கள், முதியவர்கள், நோயாளிகளால் நிற்க முடியாமல் அவதிப் படுகின்றனர். இந்த நிழற் குடையின் மேற்கூரையின் காரை பெயர்ந்துள்ளது. தரைத் தளமும் பெயர்ந்துள்ளது. இதில் விஷ ஜந்துக்கள் அண்டினால்கூட தெரியாது. எனவே இந்த நிழற்குடையை இடித்து விட்டு, புதிதாக, தரமாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று, பாபநாசத்தை அடுத்த திருப்பாலைத்துறையிலுள்ள பயணியர் நிழற் குடையின் வெளிப்புறம் காரை பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. மக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த நிழற்குடையை சீரமைக்க வும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டக் குழு சிறப்பு கூட்டம்
கரூர், பிப்.22- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டக் குழு சிறப்பு கூட்டம் அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஏ.ராஜா தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் தா.கணேசன், மாநிலச் செயலாளர் ஜெ.ஜெயராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயலாளர் அமுதன் வேலையறிக்கையை முன்வைத்தார். மாவட்ட பொருளாளர் ஆ.தமிழரசி வரவு, செலவு அறிக்கையை முன்வைத்தர். குளித்தலை வட்டார அமைப்பாளர் ப.தேவகி நன்றி கூறினார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ பிப்ரவரி 25 செவ்வாய்கிழமை அன்று கரூரில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 500 பெண் ஆசிரியர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும். கிருஷ்ணராயபுரம் வட்டாரக்கல்வி அலுவலர் செந்தில்குமாரி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பள்ளிப் பார்வையிடுதல் என்ற பெயரில் வசூலில் ஈடுபடுவதை கண்டித்தும், லஞ்சம் கொடுக்க மறுக்கும் ஆசிரியர்களுக்கு குற்றக் குறிப்பாணைகள் வழங்கி அச்சுறுத்தலில் ஈடுபடுவதை கண்டித்தும், ஆசிரியர்களை பாடம் நடத்த அனுமதிக்காமல் பள்ளி வேலை நேரத்தில் செல்போனில் ஆசிரியர்களை புறம்பேசுவதை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.
பெண் பயணியிடம் தகராறு: அரசுப் பேருந்து நடத்துநர் மீது நடவடிக்கை
புதுக்கோட்டை, பிப்.22- பெண் பயணியிடம் வாய்த் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை, ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக புதுக்கோட்டை மண்டலத்திற்குட்பட்ட மீமிசல்- திருச்சி செல்லும் புறநகர் பேருந்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, மீன் வியாபாரம் செய்யும் பெண் பயணி ஒருவரிடம் பேருந்தின் நடத்துநர் கே. பரமசிவம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து அவரிடம் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக, அவரை ஒரு நாள் இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குநர் இரா. பொன்முடி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். பயணிகளிடம் இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, பிப்.22- வங்கிகளில் உள்ள காலிப் பணியி டங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வெள்ளிக் கிழமை புதுக்கோட்டையில் அனைத்து வங்கி ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுக்கோட்டை கீழராஜவீதியிலுள்ள எஸ்பிஐ வங்கிக் கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் கே.என். ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வங்கி களில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். வங்கிகளில் தற்போது பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணிநாட்களாக அறிவிக்க வேண்டும். அனைத்து வங்கிகளிலும் இயக்குநர் குழு வில் ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்க ளின் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். பணிக் கொடையை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தினர்.
விளையாட்டில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு
தஞ்சாவூர், பிப்.22- தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள இடையாத்தி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தோர் மருதமுத்து - தேன்மொழி, இவர்களது மகன் நிவாசன், நாமக்கலில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். திருச்சியில் 2 நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில், நிவாசன் மண்டல அளவிலும் மாநில அளவிலும் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் சிறந்த கோல் கீப்பருக்கான விருதும் பெற்றுள்ளார். இதுதவிர வாலிபால் போட்டியில் மண்டல அளவில் முதலிட மும், மாநில அளவில் நான்காவது இடமும், உதை பந்து போட்டியில் மண்டல அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். சாதனை படைத்துள்ள நிவாசனை பலரும் பாராட்டி உள்ளனர்.