தஞ்சாவூர், செப். 20- தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலம் சார்பில், ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பிலான 5 புதிய தாழ்தள சொகுசு பேருந்துகளை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். புதிய பேருந்துகளை தொடங்கி வைத்து, உயர்கல்வித்துறை அமைச்சர் பேசுகையில், “தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு 3 புதிய பேருந்து சேவை மற்றும் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து வல்லத்திற்கு (வழி) மெடிக்கல் காலேஜ் செல்வதற்கு 2 புதிய பேருந்து என 5 புதிய சொகுசு தாழ்தளப் பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன” என்றார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் எச்.ராஜேந்திரன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.