தஞ்சாவூர், செப். 20- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஸ்ரீவிநாயகா திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து லயன்ஸ் சங்கத் தலைவர் கே.கே.டி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பேராவூரணி லயன்ஸ் சங்கம், ஸ்ரீ விநாயகா ஜுவல்லர்ஸ், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து செப்.21 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் பேராவூரணி ஸ்ரீவிநாயகா திருமண மஹாலில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், கண்புரை நோய், சர்க்கரை நோய், கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளுக்கான கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட அனைத்து வகையான கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்க உள்ளனர். தேவைப்படுவோருக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து, கண்ணில் லென்ஸ் பொருத்தப்படும். பொதுமக்கள் முகாமிற்கு வரும்போது, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் வர வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.