திருச்சிராப்பள்ளி, பிப்.3 - தமிழ்நாடு சாரணர் இயக்கத் துக்கு நவீன பயிற்சி வசதிகளுடன் ரூ.10 கோடியில் புதிய தலைமை யகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நிதி ஆயோக் அறிக்கையின் 17 இலக்கு களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னிலை பெற்றிருப்பதாக வும் அவர் பெருமிதம் தெரிவித்தார். திருச்சி மாவட்டம், மணப்பாறை யில் பாரத சாரணர், சாரணியர் இயக்க வைர விழா, மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற் றாண்டு நினைவு பெருந்திரளணி ஜன.28 அன்று தொடங்கியது. இதில், 24 மாநிலங்கள், 6 நாடு களின் (இலங்கை, நேபாளம், மலேசியா, சவூதி அரேபியா, ஆஸ்தி ரேலியா, ஜப்பான்) 20 ஆயிரத் துக்கும் மேற்பட்ட சாரணர், சாரணி யர் பங்கேற்று தங்களது திறமை களை வெளிப்படுத்தினர். ஞாயி றன்று மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசுகையில், சாரணர் இயக்கம் மட்டுமின்றி, எதுவாக இருந் தாலும் தமிழகம்தான் முன்னிலை யில் உள்ளது. நிதி ஆயோக் அறிக் கையில் குறிப்பிட்டுள்ள 17 இலக்கு களில் தமிழகம் முன்னிலை வகிக் கிறது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையே தமிழ கத்தை பாராட்டுகிறது. இப்போது, சாரணர் இயக்க வைர விழா மூலம் 5 உலக சாதனை விருதுகளைப் பெற்றிருப்பது மேலும் பாராட்டுக்குரி யது. சமத்துவம், சகோதரத்துவம், உடலினை உறுதிசெய்தல், ஒழுக் கத்தை உறுதி செய்தல், வேற்றுமை யில் ஒற்றுமை, வாய்மை, யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இயக்கம்தான் சாரணர் இயக்கம். கூடாரங்கள் தனித்தனியே இருந்தா லும் கூடியுள்ளவர்களின் உள்ளம் ஒன்றுதான். மாநிலங்கள் கடந்து அன்பை பரிமாற நல்ல வாய்ப்பை இந்த பெருந்திரளணி ஏற்படுத்தி தந்துள்ளது. நிகழ்வு முடிந்து அவர வர் மாநிலம் சென்றாலும் பரந்து விரிந்த மானுட தத்துவத்தின் அடிப்ப டையில், ஒற்றுமை உணர்வுடன் இருக்க வேண்டும். இந்த விழாவை நடத்த 33 குழுக் கள், 10 ஐஏஎஸ் அதிகாரிகள், 389 கல்வித்துறை அலுவலர்கள், 700 போலீசார், 460 இதர துறையினர் என 2 ஆயிரம் பேர் இணைந்து சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். பெருந் திரளணியை வெற்றிகரமாகவும், பாதுகாப்பாகவும் நடத்தியது பாராட் டத்தக்கது. நாட்டுப் பற்று என்பது நிலத்தின் மீதான பற்று என்பதை கடந்து, மக்கள் மீதான பற்றாக இருத்தல் வேண்டும். மக்கள் மீதான பற்றே உண்மையான நாட்டுப்பற்று. தமிழ்நாடு சாரணர் இயக்கத் துக்கு அதிகளவில் சாரணர்களை சேர்க்கவும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நவீன வசதி களுடன் ரூ.10 கோடியில் புதிய தலை மையகம் அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டா லின் பேசினார். அதிகாரம் பெற்ற இளைஞர் கள்-வளர்ந்த இந்தியா என்ற மையப் பொருளை கருவாகக் கொண்டு நடத்தப்பட்ட பெருந்திரளணியின் கையெழுத்து இயக்கத்தில் முதல்வர் தனது கையெழுத்தையும் பதிவு செய்தார். சாரணர் இயக்க தேசிய முதன்மை ஆணையர் கே.கே. கண்டேல் வால், பெருந்திரளணியின் சாதனைகளை பட்டியலிட்டு, உறு துணையாக இருந்தோருக்கு பட்ட யங்கள், விருதுகளை வழங்கினார். இந்த விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, சா.சி. சிவசங்கர், சிவ.வீ. மெய்யநாதன், டி.ஆர்.பி. ராஜா, கோவி. செழியன், சாரணர் இயக்க மாநில முதன்மை பேராணை யர் க.அறிவொளி, பள்ளிக் கல்வித் துறை அரசு செயலர் எஸ்.மதுமதி, சமூக நலத்துறை அரசு செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார், எம்.எல்.ஏ.க்கள், சாரணர் இயக்கத்தை தோற்றுவித்த பேடன் பவுலின் 5 ஆவது வழித்தோன்றல் டேவிட் பேடன் பவுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் அன்பில் மகேஸ்-க்கு வெள்ளி யானை விருது அறிவிப்பு
பாரத சாரண, சாரணியர் இயக்க பெருந்திரளணி விழாவுக்கு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வெள்ளி யானை சிலை (சில்வர் எலிஃபேன்ட்) விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில், பாரத சாரண-சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாட்டு தலைவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு, வெள்ளி யானை விருது வழங்கப்பட உள்ளது. மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமாருக்கு வெள்ளி நட்சத்திரம் (சில்வர் ஸ்டார்) விருது வழங்கவும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பரிந்துரை செய்துள்ளதாக பாரத சாரண, சாரணியர் இயக்க தேசிய தலைமை ஆணையர் கே.கே.கந்தேல்வால் ஞாயிறன்று நடைபெற்ற நிறைவு விழாவில் அறிவித்தார்.