மயிலாடுதுறை, பிப்.3 - மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 ஆவது புத்தகத் திருவிழா கடந்த ஜன.31 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி கொண்டாடும் விழாவாக நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நாள்தோறும் ஒரு புத்தகத்தை வெளியிடுவது என தீர்மானித்துள்ளன. அதன் அடிப்படையில், பொறையாரிலுள்ள தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியின் கூட்டுறவுத் துறை உதவி பேராசிரியரும், பெரியார் உராய்வு மைய ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஜெ.கிறிஸ்டோபர் புஷ்பராஜின் “பெரியார் என்னும் ஆயுதம்” என்ற தலைப்பிலான நூலை பாரதி புத்தகாலய அரங்கில் வெளியிட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி.மார்க்ஸ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பேராசிரியர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.