திருச்சிராப்பள்ளி, ஜூலை 16 - தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை சனிக்கிழமை எட்டியது. இதனால் எந்நேரத்திலும் அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம். எனவே காவிரி கரையோர கிராமங்களில் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், சலவைத் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், நீர்வரத்து விவரத்தினை அவ்வப்போது தெரிந்து கொள்ளுமாறும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. காவிரி நீர்நிலைகளில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ செல்பி எடுக்க அனுமதி இல்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். முசிறி முசிறி கோட்டாட்சியர் மாதவன் விடுத்துள்ள அறிவிப்பில், மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்திருப்பதால் காவிரியில் வெள்ளம் அபாய சூழல் உள்ளது. எனவே காவிரி கரையோரம் வசிக்கிற மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர வேண்டும். காவிரி கரையில் கால்நடைகளை மேய்க்க கூடாது என எச்சரித்துள்ளார்.