நாகர்கோவில், ஜன. 7- கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஈசாந்தி மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஜன.7 செவ்வாயன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதை தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிதிஒதுக்கீடு செய்து, வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஈசாந்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தலா ரூ.3.10 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் 3 வீடுகளின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளின் கட்டமைப்புகள், அடிப்படை வசதிகள், கட்டுமான பணிகளின் தரம் உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொண்டதோடு, கட்டுமான பணிகள் தொய்வின்றி நடைபெற பயனாளிகளுக்கு தேவையான சிமெண்ட், கம்பிகள் கொடுக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டது. தொடர்ந்து கோமதி நாயகம் என்பவர் மேற்கொண்டு பணிகளை தொடர தேவையான வங்கி கடனுதவி பெற்று வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் பணிபுரியும் இரண்டு பணியாளர்கள் தங்களுக்கான பணி நாட்கள் முடித்துவிட்டது. எனவே தங்களுக்கு பணி நாட்களை நீடித்து தரும்படி கோரிக்கை வைத்தார்கள். அவர்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளபடும் என தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நடைபெற்ற ஆய்வுகளில் உதவி திட்ட அலுவலர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ஹெலன் ராஜபாய், ஊராட்சி செயலர் ராஜா, மேற்பார்வையாளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.