திருச்சிராப்பள்ளி, பிப். 15 - திருச்சி மாநகராட்சி 35 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.சுரேசை ஆதரித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செவ்வாயன்று செந்தண்ணீர்புரம், மகாலெட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், “திமுக ஆட்சிக்கு வந்த பின் இப்பகுதி மக்கள் அடிப்படை தேவைகளுக்காக ஆரம்ப சுகாதார மையம், காமராஜர் தெரு, வ.உ.சி.கலைவாணர் தெரு, குமரன் ஆசாத்தெரு, பாரதி தெரு, லால்பகதூர் சாஸ்திரி தெரு, பிச்சைநகர் பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்கு என இப்பகுதிக்கு மட்டும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
நகர்ப்புற உள்ளாட்சி மாமன்றம் என்பது மக்களுக்கான தேவைகளை பெற்றுத் தரும் இடமாகும். மாநகராட்சி சார்பில் ஒதுக்கப்படும் நிதியை குடிநீர், கழிப்பிடம், கட்டிமுடிக்கப்பட்ட கழிப்பிட மேம்பாடு போன்றவற்றிக்கு பயன்படும். இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை மாமன்றத்தில் வாதாடி பெறுகின்ற, உரிமையை கேட்கின்ற வேட்பாளர் சுரேஷ் இந்த களத்தில் உள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் மாபெரும் வெற்றியை வழங்கியது போல் அந்த வெற்றியை தொடர் வெற்றியாக்க சுரேஷ்-க்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெற செய்ய வேண்டும்” என்றார். வாக்கு சேகரிப்பின் போது திமுக 35 ஆவது வட்ட கழக செயலாளர் ரெங்கநாதன், வட்ட கழக செயலாளர்கள் சண்முகநாதன், தங்கவேல், அவைத்தலைவர் சாகுல் அமீது, வட்ட துணைச் செயலாளர் ரசாக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், ஜெயபால், பாலக்கரை பகுதி செயலாளர் சிவக்குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் துண்டு பிரசுரம் கொடுத்து அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.