திருவாரூர், ஆக.17- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை செவ்வாய்க்கிழமை திருவாரூரில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி பேரவையை வாழ்த்திப் பேசினார். தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் எம்.சௌந்தரராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.9 ஆயிரமும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும். பணிக்கொடை பணியாளர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் ஓய்வு பெறும் நாளில் வழங்க வேண்டும். அங்கன்வாடி பணிகளை தவிர மற்ற பணிகளில் ஊழியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவையில் மாவட்டத் தலைவராக வி.தவமணி, செயலாளராக ஏ.பிரேமா, மாவட்டப் பொருளாளராக பி.மாலதி, மாநில செயற்குழு உறுப்பினராக எம்.செல்வி மற்றும் 5 துணைத் தலைவர்கள், 5 இணை செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.