திருவண்ணாமலை, பிப். 8- திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாறு ஒன்றியத்தில் சத்தியவாடி ஊத்துக்குளம் ஆகிய கிராமங்களில் அரை குறையாக கட்டிவிடப்பட்ட தொகுப்பு வீடு களை விரைந்து கட்டி முடிக்க கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் தெள்ளாறு பிடிஓ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவனம் nஜப்தி காரனை ஆகிய கிராமத்தில் வீடு இல்லாத மக்களுக்குவீடு வழங்கி, உடனடியாக வீடு கட்டி தர வேண்டும், பழவேரி கிராமத்தில் குடிநீர் வசதியே ஏற்படுத்தாமல், குடிநீர் தேக்க தொட்டி அமைத்து ஊழல் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எம். மாரிமுத்து தலைமை தாங்கினார், மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ப.செல்வன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு மாவட்ட செயலாளர் அப்துல் காதர், கரும்பு சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் பெ.அரிதாசு உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.