districts

img

விளை நிலங்களில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருவண்ணாமலை, பிப். 4- திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களான துரிஞ்சலாறு, ஓலையாறு ஆகியவற்றை உள்ளடக்கிய கவுத்தி-வேடியப்பன் மலைக்கு அருகே உள்ளது பாலியப்பட்டு கிராமம். சுற்றுவட்டார கிராம மக்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையாக இருக்கும் விளை நிலங்களையும், காலம்காலமாக வாழும் இருப்பிடத்தையும் அழித்து உள்ளூர் மாவட்ட மக்களின் வாழ்வையும் தொழிலையும் கணக்கில் கொள்ளாமல், மக்களின் கருத்துக்களை கேட்காமலும், சுற்றுப்புற சூழல் சட்டத்திற்கு எதிராகவும், பெருநிறுவனங்களுக்காக சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விவசாய நிலங்களும், மக்களின் குடியிருக்கும் பகுதிகளும் பாதிக்காத வகையில் தரிசு நிலப்பகுதி மாற்றக்கோரி சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் மக்கள் இயக்கம் அமைக்கப்பட்டு ஜனநாயக முறைப்படி தொடர் காத்திருப்பு போராட்டத்தை கிராம மக்கள் நடத்தி வருகின்றனர்.  போராட்டத்தின் 45ஆவது நாளான வெள்ளியன்று (பிப். 4) விளை நிலங்களில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று முற்றுகையிட்டனர். மேலும், தங்கள் கோரிக்கைகள் குறித்து தகவல் பெறும் சட்டத்தில் மனு அளிக்கும் நிகழ்விலும் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எஸ்.ராமதாஸ், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு நிர்வாகிகள் வழக்கறிஞர் அபிராமன், இல.அழகேசன், திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி, வழக்கறிஞர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.