திருவள்ளூர் அருகே பட்டியலின மக்களின் ஆலய நுழைவு போராட்ட அறிவிப்பு வெற்றி பெற்றுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள வழுதலம்பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோயில் பட்டியலின மக்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் பிற்படுத்தப்பட்ட மக்கள் தடுத்து வந்தனர். வழிப்பாட்டு உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு தங்கள் நியாயமான கோரிக்கைகளை பட்டியலின மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதில், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆக 8 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் தலித் மக்களின் காணிக்கைகள், பூஜை பொருட்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், கும்பாபிஷேகம் ஒரு நாள் ஒதுக்க வேண்டும் என ஒப்புக் கொண்டு கையெப்பமிட்டனர். ஆக 9 அன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆதிக்க சாதியினர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அடிப்படையில் எதையும் அமல்படுத்தவில்லை. பட்டியலின மக்களுக்கு விரோதமாக செயல்பட்டனர்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் தலைமையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொருளாளர் இ.மோகனா நிர்வாகிகள் வழுதலம்பேடு தலித் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்கு சென்று விசாரித்தனர்.
பட்டியலின மக்களின் வழிப்பாட்டு உரிமையை நிலைநாட்டும் வரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் போராடும். பட்டியலின மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு என்றும் துணை நிற்கும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஆக 16 அன்று மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று மனு அளித்துள்ளனர்.
உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வழுதலம்பேடு எட்டியம்மன் கோயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் செப் 20 அன்று ஆலைய நுழைவு போராட்டம் மேற்கொள்ளப்படும் என அறிவித்தது. பின்னர் மாவட்ட ஆட்சியர், காவல்துறைக்கும் அது சம்பந்தமாக புகார் மனு கொடுத்தனர்.
இந்த சூழலில் கடந்த வியாழனன்று (செப் 12), திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தையில் வழுதலம்பேடு எட்டியம்மன் கோயிலில் செப் 16 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் தலித் மக்களை அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிததார்.
இந்நிலையில் திட்டமிட்ட படி திங்களன்று (செப் 16) வழுதலம்பேடு எட்டியம்மன் கோயில் வளாகத்தில் காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். பின்னர் காவல் துறையினரின் பாதுகாப்போடு 500 க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் ஊர்வலமாக வந்தனர். அதன் பிறகு கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு மக்கள் உட்சாகமாக கோயில் உள்ளே சென்று எட்டியம்மனை மக்கள் வழிபட்டனர்.
காலம் காலமாக வழிப்பாட்டு உரிமை பட்டியலின மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்தது. 22 ஆண்டுக்கு பிறகு இப்போது தான் எட்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
நன்றி தெரிவித்த மக்கள்
எட்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உறுதுணையாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் ஆகியவற்றிற்கும், சாமியை வழிப்பட பட்டியலின மக்களை அழைத்து வந்து சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
சிபிஎம் தலைவர்கள் வாழ்த்து
சாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பிய பட்டியலின மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.விஜயன், பி.துளசிநாராயணன், ஜி.சம்பத், ஏ.ஜி.சந்தானம், ஏ.ஜி.கண்ணன், சி.பெருமாள், கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ் தீண்டாமை ஒழிப்பு மாநில பொருளாளர் இ.மோகனா, மாவட்ட தலைவர் இ.எழிலரசன், மாவட்ட செயலாளர் த.கன்னியப்பன், பொருளாளர் எம்.சிவகுமார் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.