திருவள்ளூர், ஏப் 11- திருவள்ளுர் மாவட்டத்தில் நெல்கொள் முதல்நிலையங்களில் தலையீடு செய்வோர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாயும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரித்துள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தில் நவரைப் பருவத்தில் (கேஎம்எஸ் -2022-23), 24342 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் அறுவடை துவங்கியுள்ளது. முதற்கட்டமாக ஆர்.கே.பேட்டை, கடம்பத்தூர், பள்ளிப்பட்டு, திரு வாலங்காடு, பூண்டி, திருத்தணி, எல்லா புரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய 8 வட்டாரங்களில் 48 இடங்களில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களைப் பயன்படுத்தி தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்கின்ற நெல்மணிகளை குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரக நெல் ரூ.2160 ற்கும், பொது ரக நெல் ரூ.2115ற்கும் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் விற்பனை செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்க ளில் தொடர்ந்து புகார்கள் எழும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சம்மந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார். நெல் கொள்முதலில் தலையீடு செய்யும் இடைத்தரகர்கள் மற்றும் வெளி வியாபாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் ஆட்சியர் சுட்டிக்க்காட்டியுள்ளார்.