நெல்லையில் கல்குவாரியில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் குவாரியின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக ராட்சத பாறை சரிந்த விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த முன்னீர்பள்ளம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ராட்சத பாறை விழுந்த இடத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளதாக காயமடைந்த தொழிலாளி கூறியதாக தகவல் வெளியானது.
அந்தப் பகுதியில் அவ்வப்போது மழை பெய்துகொண்டிருந்ததாலும் அங்கு மண் சரிவு தொடர்ந்ததாலும் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதற்காக தூத்துக்குடியில் இருந்து மிகப்பெரிய கிரேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட உள்ளது. அவற்றின் மூலம் மீட்புப்பணியை எளிதாக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகிறனர்.
இந்நிலையில் குவாரி உரிமையாளர் சங்கர நராயணன் மற்றும் அவரது மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.