districts

வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு  பா.ஜ.க பிரமுகர் உள்பட 4 பேர் கைது

திருநெல்வேலி, ஜன. 17- நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் ஐயப்பன் (35). இவரும், இவரது நண்பரான டவுன் தடி வீரன்கோவில் தெருவை சேர்ந்த கலை என்ற வாலிப ரும் திங்கட்கிழமை இரவு குற்றாலம் செல்லும் சாலை யில் 2 மோட்டார் சைக்கிளில் தனித்தனியே சென்றுள்ளனர். அங்குள்ள தொண்டர் சன்னதி அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.  அப்போது அங்கு ஒரு காரில் வந்த 4 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம பொருளை ஐயப்பன் மற்றும் கலை மீது வீசினர். பயங்கர சத்தத்துடன் அந்த பொருள் வெடித்ததால் அந்த பகுதியில் நின்றவர்கள் பயந்து ஓடினர். இதற்கிடையே காரில் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இறங்கிய அந்த கும்பல் ஐயப்பன் உள்பட 2 பேரையும் வெட்டிக்கொல்ல முயற்சி செய்தது. ஆனால் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனாலும் 4 பேர் கும்பல் அவர்களை விடாமல் துரத்தி யது. அவர்கள் உயிர் பிழைப்பதற்காக தப்பித்து ஓடி டவுன் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனை  பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றது. தகவல் அறிந்த டவுன் காவல் சுப்புலெட்சுமி தலைமையி லான காவல் நிலையத்தார் தொண்டர் சன்னதி பகுதிக்கு விரைந்து சென்றனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறை மற்றும் தடயவியல் அதிகாரிகள் விரைந்து சென்று பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருளின் உதிரி பாகங்களை சேகரித்து சோதனை செய்தனர். அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் உத்தரவின்பேரில் உதவி ஆணையர்கள் விஜயகுமார், ராஜேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் திருப்பதி, இந்திரா ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் காவல் ஆணையர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை துரிதப்படுத்தினார்.

இதற்கி டையே வெடித்து சிதறிய மர்மபொருள் கல்வெடி மருந்து, சீனி கற்கள் மற்றும் பால்ரஸ் குண்டுகளால் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஐயப்பன், கலை ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது இந்த  கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூலித்துரை மற்றும் அவரது உறவினர்களான இசக்கி மணி, அஜித் குமார், ராஜேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை அமைத்து பூலித்துரை உள்ளிட்ட 4 பேரையும் வலைவீசி தேடும் பணி துரிதப் படுத்தப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து  டவுன் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு நடத்திய விசாரணையில் பா.ஜனதா பிரமுகரான பூலித்துரைக்கும், ஐயப்பனுக்கும் பெண் விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த பூலித்துரை திங்கள் இரவு புரோட்டா கடைக்கு சாப்பிட சென்ற ஐயப்பன் மற்றும் அவரது நண்பர் கலை ஆகியோரை நாட்டு வெடிகுண்டு வீசி  கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தகாவல்துறையினர், அவர்களிடம் இருந்து கார், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.