தஞ்சாவூர், நவ.27- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற, “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் நடமாடும் காய்கனி விற்பனை வண்டியை மானியத்தில் பெற்ற மூதாட்டி ஒருவர், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்துக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
தஞ்சாவூர் வட்டம், வல்லம் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது மனைவி சாந்தா (60) தரையில் அமர்ந்து காய்கனி விற்பனை செய்து வந்தார். இவர் கடந்த நவ.18 ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உதவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தார்.
இம்மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன்பேரில் உடனடி நடவடிக்கையை தோட்டக் கலைத் துறை அலுவலர்கள் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், மூதாட்டி சாந்தாவிடம் ரூ.15, ஆயிரம் மானியத்தில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான நடமாடும் காய்கனி விற்பனை வண்டியினை வழங்கினார். மனு கொடுத்த ஒரே வாரத்தில் உதவி கிடைத்தது மிகவும் சந்தோசம் எனவும், இந்த உதவியை செய்த மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி என மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி சாந்தா நெகிழ்வுடன் தெரிவித்தார்.