தஞ்சாவூர், ஏப்.6– திருக்காட்டுப்பள்ளி அருகே பவனமங்கலம் காவிரி ஆறு, விளாங்குடி மற்றும் வாழ்க்கை கிராமம் கொள்ளிடம் ஆற்றில் தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆவிவர் வியாழக் கிழமை ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம், திருக் காட்டுபள்ளி அருகே பவனமங்க லம் கிராமத்தில், காவிரி ஆற்றிலும், திருவையாறு அருகே விளாங்குடி, வாழ்க்கை கிராமத்தில், கொள்ளி டம் ஆற்றில் செயல்பட்ட மணல் குவாரிக்கு எதிராக, கடந்த 2018-ஆம் ஆண்டு பவனமங்கலத்தை சேர்ந்த பாலகணேஷ், பொண்ணு ராமன், விளாங்குடியைச் சேர்ந்த சச்சிதானந்தம் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில், மனுவில் குறிப்பிட்டுள்ள கிராமப் பகுதிகளின் மணல் பரப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து வியாழக்கிழமை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பவனமங்கலம் காவிரி ஆற்றிலும், விளாங்குடி, வாழ்க்கை கிராமம் கொள்ளிடம் ஆற்றிலும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, ஆட்சியரிடம் பொன்னுராமன், பாலகணேஷ், வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் ஆகி யோர் மனு அளித்தனர். அதில், “எங்கள் பகுதி கிராமங்களுக்கு உயிர்நாடியாக விளங்குவது காவிரி. எங்களின் குடிநீர் மற்றும் விவசா யத்திற்கு காவிரியே ஆதாரம். எங்க ளது கிராமம் திருக்காட்டுப்பள்ளி யில் அமைந்துள்ள காவிரி அணை யிலிருந்து ஒரு கி.மீ-க்குள் அமைந் துள்ளது. அணையிலிருந்து திறந்து விடப்படும் நீர் ஆற்று மணலை அடித்துச் சென்றுவிடும்.
இதன் காரணமாக ஆறு பள்ளமாகவும், எங்களது ஊர் மேடாகவும் அமைந்துள்ளது. இதனால், எங்கள் ஊருக்கு திருக்காட்டுப்பள்ளி அணைக்கு மேற்கில், புதுச்சத்திரம் கிராமத்தில் பாசனவாய்க்கால் தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலில் தண்ணீர் ஏறிப் பாய்வதில்லை. புதுச்சத்திரம், விண்ணம் பேட்டை கிராமங்களைக் கடந்து எங்கள் ஊருக்கு பாசன நீர் வருவ தில்லை. இதன் காரணமாக எங்கள் ஊரில் மோட்டார்கள் மூலம் தான் விவசாயம் நடைபெறுகிறது. தண்ணீருக்கு ஆதாரமாக இருப்பது ஆற்றில் படிந்துள்ள மணல்தான். மணலை அப்புறப் படுத்திவிட்டால் ஊரிலுள்ள ஆழ் துளைக் கிணறுகள் வறண்டு விடும். குடிநீர், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். கடந்த முறை பவன மங்கலம் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க முற்பட்டபோது, (01.05.2018) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மணல்குவாரி அமைப்பதைத் தவிர்க்க வலியு றுத்தித் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது அதன் முடிவு அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலரால் ஆட்சி யருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிராம மக்களின் நலனுக்கும், கிராம சபையின் முடிவுகளுக்கும் எதிராக குவாரி அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்” எனக் குறிப் பிட்டிருந்தனர். விளாங்குடியை சச்சிதானந்தம் அளித்த மனுவில், “எங்கள் பகுதி யில் மணலை எடுத்தால் நிலத்தடி நீர் மட்டமும், விவசாயமும் பாதிக் கப்படும். குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும். கொள்ளிடம் ஆற்றில் சுமார் 22 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து எட்டு மாவட்டங்களுக்கு மேல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக எடுத்துச் செல்லப்படு கிறது. மேலும், மணல் குவாரி அமைத்தால் கூட்டுக் குடிநீர்த் திட்டம் பாதிக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.