தமிழக கடற்கரை பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
முற்றிய நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முளைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டு பூக்கும் தருவாயில் உள்ள நெற்பயிர்கள் பதராக மாறும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஒரத்தநாடு, மேல உளூர், சூரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்டு, சாலையோரம் குவித்து வைக்கப்பட்ட நெல்மணிகள் மற்றும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது.
இதேபோல் மார்கழிப் பட்ட சாகுபடி செய்யப்பட்டிருந்த கடலை வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் கடலை அழுகும் நிலையில் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பயிரிடப்பட்டிருந்த நெல், கடலை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த நவம்பரில் கொட்டித் தீர்த்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதிலிருந்து மீண்டு வரும் நிலையில், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக விவசாயிகள் மீண்டும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நெற்பயிருக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்துள்ள நிலையில் தற்போது பெய்த பெருமழை அவர்களை நிலை குலைய வைத்துள்ளது.
முறையான வடிகால் வசதி இல்லாததாலும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் நெல் வயல்களில் தேங்கி நிற்கும் மழை நீர் வடிய ஒரு வார காலம் ஆகலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் தொடர் மழை பெய்தால் நிலைமை இன்னும் மோசமாகலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர்.
பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்ற மூதுரைக்கேற்ப தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
விவசாயிகள் சங்கம்
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதாக, வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை துறை மூலம் முழுமையாக கணக்கெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
வீடு இடிந்து விழுந்து காயம்
பேராவூரணி அருகே வாத்தலைக்காடு கிராமத்தில் மச்சு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில், வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்த விவசாயி ஜனார்த்தனன் என்பவர் இடுப்பில் அடிபட்டு பலத்த காயங்களுடன், ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சிபிஎம் ஆறுதல்
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது அதனை வடிய வைக்க முயற்சிகள் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினம் அருகே செம்பருத்தி நகரில் வெள்ளநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள், புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வீ.கருப்பையா, ஒன்றியச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் மழைநீர் புகுந்தது. இதையடுத்து மோட்டார் எந்திரம் மூலம் தண்ணீர் இறைத்து வெளியேற்றப்பட்டது.