முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ள நிலையில் மேலும் ஒரு மோசடி புகார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது நவ.15 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவை டிச. 17-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து தான் கைது செய்யப்படலாம் என்பதால் ராஜேந்திர பாலாஜி திடீரென தலைமறைவானார்.
இதனையடுத்து, கடந்த ஜனவரி 5 ஆம் தேதி கர்நாடகத்தில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜியின் உறவினர் கணேசன் ஆகியோரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அவரை ஜாமின் விடுவிக்க தமிழக அரசு மறுத்து தெரிவித்து வந்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், அவர் மீது மேலும் ஒரு மோசடி புகார் வந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், அரசு வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் ரூ.2 கோடி மோசடி செய்துவிட்டதாக ராஜேந்திர பாலாஜி, அவரது நேர்முக உதவியாளர் சுதாகரன் மற்றும் அவரது மனைவி மீது புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சுதாகர் மற்றும் அவரது மனைவி தேவிஸ்ரீயிடம் கேட்டபோது, ராஜேந்திர பாலாஜியின் உதவியாளராக தற்போது இல்லை எனவும் அவரிடம் தான் பணம் இருப்பதாகவும், இனிமேல் எங்களிடம் வந்து பணத்தை கேட்டால், உன்னை ஆட்களை வைத்து அடித்து கொன்று கூவத்தில் வீசிவிடுவேன் என அவர்கள் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.
எனவே, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2.05 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் சுதாகர் மற்றும் அவரது மனைவி தேவிஸ்ரீ ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.