நீட் விலக்கு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்படும் ஆளுநரின் அராஜகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வு மாநில உரிமை, கூட்டாட்சித் தத்துவம், மக்களாட்சி மாண்புகளை சிதைத்து, தமிழ்நாட்டில் 25 மாணவர்களை பலி கொண்டுள்ளது. கிராமப்புற ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை பறித்துள்ளது.
ஆகவேதான் கடந்த 5 ஆண்டுகளாக இத்தேர்வுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
தமிழக அரசும் சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு கடந்த செப்டம்பர் மாதம் அனுப்பியது.
தமிழக ஆளுநர் கடந்த 5 மாதமாக பல லட்சம் பெற்றோர்களையும் மாணவர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதோடு காலதாமதப்படுத்தி பிஜேபி அரசின் முடிவை திணிக்க முற்பட்டதோடு, தற்போது நீட் விலக்கு சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பி மாணவர்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறார்.
ஆளுநரின் இச்செயல் ஜனநாயகத்துக்கு விரோதமானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயலாகும்.
ஒத்திசைவு பட்டியில் உள்ள ஒரு பொருள் குறித்து மாநில அரசு சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பினால், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 200 படி அதை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பும் அதிகாரம் மட்டுமே ஆளுநருக்கு இருக்கிறது. அதை ஏற்கவோ, நிராகரிக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது,
ஆனால் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி - ஒன்றிய பிஜேபி அரசின் கைப்பாவையாக இருந்து கொண்டு மாணவர்களுக்கு அநீதி இழைத்து வருகிறார்.
ஆளுநர் எந்த அடிப்படையில் சமூக மற்றும் கல்வி பின்தங்கலுக்கு உள்ளான சமூகங்கள் பாதிக்கப்படவில்லை என்று முடிவுக்கு வருகிறார். அவர்களிடம் அதற்கான எந்த வகையான ஆய்வறிக்கை உள்ளது.
சி.எம்.சி வழக்கு சிறுபான்மை நிர்வாகத்தின் உரிமைகள் சார்ந்தது. அந்த வழக்கிற்கும் மாநில உரிமைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆளுநர் அவர்களின் செயல் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மாநில உரிமையை பறிக்கும் செயல். ஆகவே அரசமைப்புச் சட்டத்தை மதிக்காத ஆளுநர் ரவி பதவி விலகவேண்டும். ஒன்றிய அரசு தமிழக ஆளுநரை திரும்பப்பெற வேண்டும். நீட்டை ரத்து செய்யவேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்ட குழு சார்பாக சங்ககிரி பேருந்து நிலையம் அருகே வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் எஸ். பவித்ரன் தலைமை வகித்தார். இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.