சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்ப பெற இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 1997 இல் உருவாக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் சேலம், நாமக்கல், தர்மபுரி,கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை இணைத்து செயல்படுகிறது.பல்கலைக்கழகத்தின் கீழ் 27 துறைகள் மற்றும் 113 இணைவு பெற்ற அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன இப்பல்கலைக்கழகம் இளங்கலை, முதுநிலை மற்றும் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்கி வருகிறது.
இப்பல்கலைக்கழகம் சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கி வருகிறது,சாதி குறித்தான சர்ச்சையான கேள்வித்தாள் தயாரித்தது, பல்கலைக்கழக நிர்வாக சீர்கேட்டையும், ஊழல் முறைகேட்டையும் வெளிப்படுத்தும் விதமாக மாணவர்கள் ஆசிரியர்கள் யாரிடமும் பேசி விடக்கூடாது என்பதற்காக அரசியல் பரப்புரைகள் மேற்கொள்ளக் கூடாது பத்திரிக்கையாளர்களை சந்திக்கக் கூடாது என கருத்து சுதந்திரத்தை தட்டிப் பறிக்கும் சுற்றறிக்கையை ஆசிரியர் மாணவர்களுக்கு விடுத்தது.
பல்கலைக்கழக பதிவாளர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் தமிழ்நாடு அரசு அவரை பணி இடைநீக்கம் செய்ய 3 முறை பரிந்துரை செய்தும், துணிவேந்தர் கண்டுகொள்ளாமல் ஊழலுக்கு துணை நின்றதும், மேலும் பல்வேறு ஊழல் முறைகேடுகளிலும்,பாலியல் குற்றச்சாட்டுகளிலும் சிக்கி பல்கலைக்கழக நிர்வாகம் திறனற்று செயல்படுகிறது. பெரியார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் முதல் கடை நிலை ஊழியர் வரை ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாகவே உள்ளது.
பெரியார் பல்கலைக்கழகம் தனது நிர்வாக சீர்கேட்டையும் ஊழல் முறைகேடுகளையும் சரி செய்து பல்கலைக்கழக நிதி வருவாயை பெருக்குவதற்கு பதிலாக தேர்வு கட்டணத்தை உயர்த்தி மாணவர்கள் மீது தேர்வு கட்டணத்தை திணித்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கிறது.
பெரியார் பல்கலைக்கழகம் 21.06.2024 அன்று திருத்தியமைக்கப்பட்டு பல்கலைக்கழகத் தேர்வு கட்டண அறிவிப்பை வெளியிட்டது.இளநிலை ஒரு தாளுக்கு 85 ரூபாயாக இருந்ததை தற்போது அவை 100 ஆக உயர்த்தியும், முதுநிலை ஒரு தாளுக்கு 150 ரூபாயாக இருந்ததை தற்போது அவை 175 ஆக உயர்த்தியும் பல்கலைக்கழக சார்ந்த அனைத்து தேர்வு கட்டணங்களும் உயர்த்தியுள்ளது.
எனவே, ஏழை எளிய மாணவர்களை பாதிக்கின்ற கட்டண உயர்வை உடனடியாக பெரியார் பல்கலைக்கழகம் திரும்ப பெற இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.