எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசைப்படகுகளை பறிமுதல் செய்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, சனியன்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில், தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களின் இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த 12 மீனவர்களையும் சிறை பிடித்தனர்.
கடந்த பிப்.8 ஆம் தேதி கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், சனியன்று மீண்டும் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இந்த சூழலில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழக மீனவர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.